லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக மருத்துவ கல்லூரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார், புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் சந்தேகப்படும் வகையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது, அந்த நபர் சாமந்த பாளையம் பகுதியில் வசித்துவரும் அப்துல் சமது என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தெற்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் படி மருத்துவக்கல்லூரி சாலை பொன்நகர் பாரியில் வசித்து வரும் முரளி என்பவரையும் பாலாஜி நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த காரணத்திற்காக போலீசார் அவரையும் கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.