புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள பெண்களுக்கு ட்ராக்டர் ஓட்ட பயிற்சி அளித்து வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் Singhu, Tikri, Ghazipur உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில், தொடர்ந்து 41-வது நாளாக போராடி வருகின்றனர்.
மத்திய அரசுடன் நேற்று நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் தொடருமென அறிவித்துள்ள விவசாயிகள், தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று, மாபெரும் ட்ராக்டர் பேரணி நடத்தப்படுமெனவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதற்கு முன்னோட்டமாக, ஹரியானாவின் குண்ட்லி – மானேசர் – பல்வால் நெடுஞ்சாலையில் நாளை ட்ராக்டர் பேரணி நடத்தவுள்ளனர்.
இந்த பேரணியில் பெண்களும் பங்கேற்கவுள்ளனர். இதனை முன்னிட்டு, ஹரியானாவின் Jind பகுதியில், 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, ட்ராக்டர் ஓட்ட, விவசாயிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.