மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புது மாப்பிளை உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் விஜய பிரபாகரன்(26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டின் வனஜா மேரி என்ற பெண்ணிற்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விஜயபிரபாகரன் அவருடைய உறவினர்கள் லியோ அமல ஜோசப் மற்றும் லாரன்ஸ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மாரியாயிபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்- நிலக்கோட்டை சாலையில் மைக்கேல்பாளையம் அருகே சென்ற போது நிலக்கோட்டையிலிருந்து செம்பட்டி நோக்கி சென்ற மினி லாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது நேருக்கு நேர் மோதியது .
இதில் புதுமாப்பிள்ளை விஜயபிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லியோ அமல ஜோசப் மற்றும் லாரன்ஸை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே லியோ அமல ஜோசப் உயிரிழந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லாரன்ஸ் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.