வரும் 13-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அவரச கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில், கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் துறை செயலாளர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
வரும் 13-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சென்னை, மும்பை, கர்னல், கொல்கத்தா ஆகிய நகரங்களில் 37 தடுப்பூசி சேமிப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த சேமிப்பகங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு தடுப்பூசிகள் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தனர்.
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் Co-WIN அமைப்பில் தங்களது பெயரை முன்பதிவு செய்யத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.