பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகருடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது.
இந்நிலையில் அந்த வழக்கில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர்களின் கூட்டாளிகளான பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், பைக் பாபு, கெரோன் பவுல் ஆகிய மூன்று பேரிடம் சிபிஐ போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டுமென மகளிர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்ட பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கி முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளனர். அருளானந்தம் அதிமுக அமைச்சர்கள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருவதால், இந்த கொடூர பாலியல் வழக்கில் பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.