தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் லேசான மழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்கிழக்கு, மத்திய கிழக்கு மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.