மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கீழ்மணம்பேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கன்னியப்பன்- கஸ்தூரி .நேற்று முன்தினம் கஸ்தூரி தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு சென்று பால் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கீழ்மணம்பேடு பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது அந்த வழியில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் கஸ்தூரியின் மீது பலமாக மோதியது.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த கஸ்தூரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கஸ்தூரியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கஸ்தூரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.