செல்போன் திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் சரக்கு ஆட்டோ ஓட்டுனர். நேற்று காலை இவர் திருப்பூர் மார்க்கெட்டுக்கு ஆட்டோவில் வந்துள்ளார். இந்நிலையில் சரக்கு ஆட்டோவை மார்க்கெட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு ஆட்டோவில் தூங்கியுள்ளார். பின்னர் எழுந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அவர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் மார்க்கெட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் இரண்டு நபர்கள் ஆட்டோவில் இருந்த செல்போனை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில் மார்க்கெட்டில் சுற்றித்திரிந்த மகேந்திரன், சரத்குமார் ஆகிய இரு நபர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்ததோடு அந்த இரண்டு நபர்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.