பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் பற்றி மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது.
இந்நிலையில் அந்த வழக்கில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர்களின் கூட்டாளிகளான பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், பைக் பாபு, கெரோன் பவுல் ஆகிய மூன்று பேரிடம் சிபிஐ போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டுமென மகளிர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தின் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை. ஆளும் கட்சியை சேர்ந்தவர் கைதாகி இருக்கிறார். இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கு பாதையாக இருக்க வேண்டும். வேறு எதற்காகவோ பயன்பட்டு விடக்கூடாது” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.