அ.தி.மு.க. கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை என்றும் தி.மு.க. கூட்டணியில் வலுவாக இருக்கிறது என்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.எம்.பி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, திமுக கூட்டணி தற்போது மிகவும் வலுவாக இருக்கிறது. எப்பேர்ப்பட்ட சக்தியும் திமுகவின் வெற்றியை தடுக்க இயலாது. விடுதலை சிறுத்தை கட்சியும் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது. சுமூகமான முறையில் எங்களது பேச்சுவார்த்தைகளை நடத்தி கூட்டணி வெற்றி பெறக்கூடிய வகையில் தொகுதிகளை பங்கீட்டு கொள்வோம்.
எங்களை திமுக, உதயசூரியன் சின்னத்தில் நிற்கும்படி ஒருபோதும் கூறியதில்லை. தனி சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம். சின்னம் தொடர்பாக சுதந்திரமாக முடிவெடுக்க திமுக ஒத்துழைக்கும். சின்னத்தை பெறுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.
நடிகர் கமல் ஒரு அணியை உருவாக்கினால் கூட அ.தி.மு.க.வின் வாக்குகள் மட்டுமே பாதிக்கப்படும். ஏனென்றால் அ.தி.மு.க. கூட்டணியில் ஒருமித்த கருத்தும் இல்லை, ஒற்றுமையும் இல்லை. அ.தி.மு.க.வை, பா.ஜனதா மற்றும் பா.ம.க மறைமுகமாக பிளாக்மெயில் செய்து வருகிறது. அவர்கள் அதிமுகவை பலவீனப்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் அதிமுக தனிமெஜாரிட்டியில் வெற்றிபெற கூடாது என்பது அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது.
ஆகவே அதிமுக கூட்டணி கட்டுக்கோப்பாக தொடருமா? என்று நம்மால் சொல்ல முடியாது. ஆனால் திமுக அணி கட்டுக்கோப்பாக தொடரும் என்று உறுதியாக சொல்ல முடியும். எனவே திமுக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை.எனவே திமுக அணி கூட்டணி மிகவும் வலுவாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்கிறது. அதிமுக அணி தொடர்வதில் சந்தேகம் இருக்கிறது என்று கூறினார்.