தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் அரிசியையும், கடத்த பயன்படுத்திய லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்துவதாக வந்த தகவலின்படி அதனை தடுக்கும் பொருட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாவட்ட வழங்கல் அதிகாரி சுவராஜ் தலைமையில், துணை தாசில்தார் அருள்லிங்கம், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், வருவாய் துறை பறக்கும்படை தனி தாசில்தார் பாபு ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக அவ்விடத்திற்கு வந்த ஒரு லாரியை அதிகாரிகள் நிறுத்தினர். இந்நிலையில் அதிகாரிகள் லாரியை மறித்ததும் அதன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அவனை பிடிக்க முயற்சித்தும், முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து அந்த லாரியை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் 18 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த ரேஷன் அரிசியை லாரியுடன் சேர்த்து அதிகாரிகள் பறிமுதல் செய்து, 18 டன் ரேஷன் அரிசியை கோணம் அரசு கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் அங்கு பறிமுதல் செய்யப்பட்ட லாரியானது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்கள் யார் என்றும், அது எங்கிருந்து கடத்தப்பட்டு கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.