தமிழக – கேரள எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளா தொடங்கி வட மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தமிழக – கேரள எல்லைகளில் கால்நடை பராமரிப்புத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் முகாமிட்டு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு காடை, கோழி, வாத்து போன்ற பறவை இனங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது.
ஆனால் நீலகிரி மாவட்டம் கூடலூர்- கேரள எல்லைகளில் போதிய கால்நடை மருத்துவர்கள் இல்லாததால் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று உடனடியாக நாடுகானி,சோலாடி, பாட்டவயல் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கால்நடை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும் கேரளாவில் இருந்து வரும் சரக்கு மற்றும் தனியார் வாகனங்களை பதிவு செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குனர் பகத்சிங் ஆய்வு செய்தார்.