பரமத்தி வேலூரில் தீயில் கருகி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரமத்தி வேலூர் அருகே உள்ள ஆதிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பூபதி-கீதா. பூபதி லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கீதா கூலி வேலை செய்து வருகிறார்.இத்தம்பதியருக்கு கவுசிக்(7) என்ற ஆண் குழந்தையும் வித்யபாரதி(5) என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கீதா தனது இரு குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு வெளியே உள்ள குப்பைகளுக்கு தீ வைத்து விளையாடி உள்ளனர்.
விளையாடும் போது எதிர்பாராத விதமாக குப்பையிலிருந்து வெளிவந்த தீ வித்யபாரதியின் உடையில் மளமளவென்று எரிய தொடங்கியது. இதனால் குழந்தை அலறியது .குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து குழந்தையை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வித்யபாரதி நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.