தமிழகத்தில் ஜனவரி 18ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
அவ்வாறு பள்ளிகள் திறப்பது பற்றி நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் 70% பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்றும், 30% பெற்றோர்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு முக்கியம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 18ஆம் தேதிக்கு பிறகும், பிப்ரவரி 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. அதன்பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.