வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(72). சுப்பிரமணியம் தனது மனைவி அமராவதி(64) மகள் கோகிலா(45) மற்றும் உறவினர்களான சந்திரன், சுகுணா, சாந்தாமணி, சுபிக்ஷா, மோகன், செண்பகம், ஜெயபாரதி, யசோதா, ஜெயலட்சுமி, துளசி, சந்தோஷ், செந்தில்குமார் ஆகியோருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு நேற்று இரவு வேனில் புறப்பட்டு சென்றுள்ளார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள தமிழக-கர்நாடக எல்லையில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் உள்ள 15 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் வேனில் இருந்தவர்கள் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர் .
அப்போது விபத்து ஏற்பட்டதால் வேனில் இருந்தவர்கள் அலறியுள்ளனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்து குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். மேலும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுப்பிரமணியம் அவரது மனைவி அமராவதி மற்றும் அவரது மகள் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 13 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.