பரிசுத் தொகை என கூறி இணையத்தில் 11 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஒரு மருந்து விற்பனையாளர். அடிக்கடி தனது வீட்டு உபயோகப் பொருட்களை இணையதள நிறுவனம் மூலம் வாங்கி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணையதளத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் இவருக்கு வந்தது.
அதாவது அவரது பத்தாம் திருமண நாளுக்காக குழுக்களில் அவர் பெயரில் ஒரு பெரும் தொகை பரிசாக கொடுக்கப்பட இருப்பதாகவும் அதைப் பெற்றுக் கொள்வதற்கு வரி செலுத்தும் வங்கிக் கணக்கில் பணம் போடவும் குறிப்பிடப்பட்டு வந்தது. இதனால் நந்தகுமார் இணையதள நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டு உறுதி செய்து கொண்டு, அந்நிறுவனம் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பதினோரு லட்சம் ரூபாய் வரை அனுப்பினார். அவ்வளவு தொகை அனுப்பியும் அவருக்கு பரிசுத் தொகை கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் தொடர்பு கொண்டு கேட்ட போது அவருடைய பரிசுத் தொகை ரத்து செய்யப்பட்டு விடும் என வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் மிரட்டல் வந்தது. சுதாரித்துக்கொண்ட நந்தகுமார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் இணையதள நிறுவனத்தின் அந்த வாடிக்கையாளர் சேவை பிரிவை சேர்ந்த சுஜாதா மண்டல், சதாம் பெகாடா, கொண்டாரப்பு சேகர் போன்றோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.