கோவையில் லஞ்சம் வாங்கிய வரி வசூல் அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவையில் உள்ள சுந்தராபுரத்தில் மாநகராட்சி வரிவசூல் மையம் உள்ளது. இங்கு வரிவசூல் அதிகாரியாக கவுஸ் மொய்தீன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் செந்தில் குமார் என்பவரிடம் வீடு அதிக பரப்பளவில் கட்டப்பட்ட இருப்பதாக கூறியுள்ளார். இதனால் வீட்டின் வரியை குறைவாக நிர்ணயம் செய்ய 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு செந்தில்குமார் 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருவதாக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செந்தில்குமார் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பெயரில் துணை சூப்பிரண்டு தலைமையில் காவல்துறையினர் நேற்று மதியம் 12 மணியளவில் ரசாயனம் தடவிய 18 ஆயிரம் ரூபாயை செந்தில்குமாரிடம் கொடுத்து அனுப்பிவிட்டு அப்பகுதியில் மறைந்து நின்றனர். இந்த பணத்தை செந்தில்குமார் வரி வசூல் அலுவலரிடம் கொடுக்க சென்றார். அதற்கு அவர் தனது உதவியாளர் தனபாலிடம் பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து செந்தில்குமார் தனபாலிடம் 18,000 ரூபாய் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் கவுஸ் மொய்தீனையும் தனபாலையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் லஞ்சம் கேட்டு வற்புறுத்துவது மற்றும் லஞ்சம் பெறுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.