வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது
12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணியில் இமாம் உல்-ஹக்கும், ஃபகர் சமானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆட்டத்தின் 3வது ஓவரில் ஷெல்டன் காட்ரெல் பந்து வீச்சில் இமாம் உல்-ஹக் 11 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஃபகர் சமானும் 22 ரன்னில் ஆண்ட்ரே ரஸல் வீசிய 6வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் வந்த பாபர் அசாம் சிறிது நேரம் தாக்கு பிடித்து 22 ரன்கள் நிலையில் ஓசன் தாமஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.
இதையடுத்து வந்த வீரர்கள் ஹாரிஸ் சோஹைல் 8, சர்பராஸ் அகமது 8, முகமது ஹபீஸ் 16, இமத் வாசிம் 1, ஷதாப் கான் 0, ஹசன் அலி 1 என அடுத்தடுத்து வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பரிதாபமாக வெளியேறினார். வாகப் ரியாஸ் மட்டும் கடைசியாக 18 (11) ரன்கள் 2 சிக்ஸர் 1 பவுண்டரி அடித்து ஆட்டமிழந்தார்.
முகமது அமீர் 3 ரன்னுடன் களத்தில் இருந்தார். இறுதியில் பாகிஸ்தான் 21.4 ஓவரில் 105 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓசன் தாமஸ் 4 விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், ஆண்ட்ரே ரஸல் 2 விக்கெட்டுகளும், காட்ரெல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 106 என்ற எளிய இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், சாய் ஹோப்பும் களமிறங்கினர். தொடக்கத்தில் கெய்ல் அதிரடியாக விளையாட, சாய் ஹோப் 11 ரன்னில் முகமது அமீர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த டேரன் பிராவோ 0 ரன்னில் நடையை கட்டினார். அதன் பின் நிகோலஸ் பூரனும், கெய்லும் ஜோடி சேர்ந்தனர். பூரன் நிதானமாக விளையாடினாலும், கெய்ல் வழக்கம் போல் அதிரடி காட்டி 34 பந்துகளில் 50 ரன்கள் (6 பவுண்டரி 3 சிக்ஸர்) குவித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஹெட் மேயர் களமிறங்கினார். அதன் பிறகு பூரன் அதிரடி காட்டி 19 பந்துகளில் 34* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார். அவருடன் ஹெட் மேயர் 7 ரன்னுடன் களத்தில் இருந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 13.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 108 ரன்கள் எடுத்து வென்றது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமீர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ,