அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 3 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய இருதய சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டு தலைமை வகித்தார். மேலும் புதிய இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் பேசுகையில் , “புதிய இருதய சிறப்பு சிகிச்சை பிரிவு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த சிகிச்சையின் மூலம் இருதய வால்வு சுருக்கம் நோய்களுக்கு பலூன் சிகிச்சை, மாரடைப்பு, ரத்தக் குழாயில் அடைப்பை எளிதாக கண்டறிய முடியும், இருதயத்தில் ஏற்பட்ட ஓட்டைகளை அடைக்கும் சிகிச்சை போன்ற பல்வேறு இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். எவ்வித செலவும் இல்லாமல் ஏழை மக்களுக்கு இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இங்கே சிகிச்சை அளிக்கப்படும் என்பதால் பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி இருக்காது” என கூறியுள்ளார்.