கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து கொண்டு சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மணிபாலன், சக்திவேல், ராஜா ஆகிய 3 பேரும் கடந்த 6ஆம் தேதி அஸ்வத் புருக்காலுதீன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிறிய கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை படையினர் திடீரென மீனவர்களின் நாட்டுப்படகில் சுற்றிவளைத்தனர்.
அதன் பின்னர் சக்திவேல், மணிபாலன், ராஜா ஆகிய 3 பேரையும் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று அம்மூவரையும் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தை அறிந்த அம்மூவரின் குடும்பத்தினரும் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இதனால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யும் பொருட்டு, மத்திய-மாநில அரசுகள் இலங்கை அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.