வயநாடு மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 7, 8 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் ராகுல் காந்தி அமேதியில் மக்களவை தொகுதியில் தோல்வி அடைந்தார். அதே நேரம் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றார்.
வயநாடு மக்களவை தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.பி.சுனீரைவிட 4 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதனையடுத்து வருகின்ற 7, 8 ஆகிய தேதிகளில் வயநாடு மக்களவை தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இருக்கிறார்.இந்த பயணம் குறித்து ராகுல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.