காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட லிங்கத்தை வைத்து சிவன் கோவில் கட்டப்பட்ட காரணத்தினாலேயே இந்த ஊருக்கு சிவகாசி என்று பெயர் வந்தது. சிவகாசி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி. இந்த தொகுதியை பொறுத்தவரையில் கடந்த 1971 ஆம் ஆண்டு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக இரண்டு முறையும் ,அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 1991ஆம் ஆண்டு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் இந்த தொகுதியில் ஒருமுறைகூட திமுக வெற்றி பெற்றதில்லை.
இந்த நகரத்தை பொருத்தவரையில் முக்கியமான தொழில்களாக இரண்டு தொழில்கள் உள்ளன. ஒன்று அச்சகங்கள் மற்றொன்று பட்டாசு உற்பத்தி. அச்சகங்கள் பொறுத்தவரை இந்தியாவில் மொத்தமாக இருக்கும் 60 சதவீத அச்சகத் தொழில் இந்த நகரத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல் பட்டாசு உற்பத்தியில் 90% பட்டாசு உற்பத்தி இந்த நகரத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது .ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக பட்டாசு உற்பத்தி இந்த நகரத்தில் மேற்கொள்ளப்படுகிறது
இத்தொகுதியில் மொத்தம் 1250 பட்டாசு ஆலைகளும், 800-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன. மானாவாரி சாகுபடியாக மக்காச்சோளம், கேழ்வரகு மற்றும் பருத்தி சாகுபடி செய்யப்படுகின்றன. பட்டாசு தொழிலை நம்பி தொகுதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் பட்டாசு தொழிலுக்கு மாற்றாக மாற்றுத் தொழிலை ஏற்படுத்தி தருவதுடன் தொழில் வர்த்தக பூங்கா அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
திருத்தங்கல் சாலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது பட்டாசு ஆலை நிறைந்த இந்த தொகுதியில் பட்டாசு ஆலைகளுக்கு செல்வதற்கான கிராமப்புற சாலைகள் இந்த தொகுதியில் முறையாக அமைக்கப்படவில்லை. சிவகாசி நகரில் முக்கிய பஜார் வீதியில் சாலை வசதிகள் இல்லை என்ற குறைகள் உள்ளன. சிவகாசி நகர பகுதிகளில் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வரும் நிலையில் சுற்றுவட்ட சாலைகள் அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
சிவகாசி ஆனையூர் உள்ள அரசு மினி விளையாட்டு அரங்கம் மேம்படுத்த வேண்டும். இ.எஸ்.ஐ மருத்துவமனை தரத்தை மேம்படுத்தி கூடுதல் கட்டிட ம் கட்ட வேண்டும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தேவைப்படும் இடங்களில் மினி பேருந்துகள் இயக்கப்படும் என்ற வாக்குறுதி நிலுவையில் உள்ளது. சிவகாசி மற்றும் திருத்தங்கள் நகராட்சிக்கு இரண்டாவது தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணி செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியும், சிவகாசி நகராட்சிக்கு 117 கோடியே 34 லட்சம் ரூபாய் திருத்தங்கல் நகராட்சி 88 கோடியே 96 லட்சம் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.