திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று வேலைக்கு சென்ற ஜெயஸ்ரீ நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது ஒன்பது மணிக்கு வந்து விடுவேன் என்று கூறியுள்ளார். அருகில் ஒரு ஆண் குரலும் கேட்டு இருந்தது. பிறகு நீண்ட நேரமாகியும் ஜெயஸ்ரீ வராததால் பெற்றோர் தேடியுள்ளனர்.
பின்னர் தொப்பம்பட்டி அருகே உள்ள வாகரைப் பகுதியில் புதர் அருகே ஜெயஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஜெயஸ்ரீ மில்லில் வேலை செய்து வந்த தங்கதுரை என்பவரை காதலித்து வந்ததாகவும் தொடர்ந்து ஜெயஸ்ரீ திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த தங்கதுரை தனது உறவினர்களுடன் சேர்ந்து அவரை அழைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையில் ஜெயஸ்ரீயின் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஜெயஸ்ரீ வேலை பார்த்து வந்த மில் வேன் சென்றதை அடுத்து அதன் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதன்பின்பு போலீசார் சமாதானம் பேசியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.