நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்தா’ படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வந்த திரைப்படம் ‘அண்ணாத்த’ . கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது . ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன்பின் குணமாகி வீடு திரும்பினார்.
இதன் பின்னர் அண்ணாத்த படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியானது . தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் முடிந்த பின்தான் அண்ணாத்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு அண்ணாத்த படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ரஜினி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.