தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தூத்துக்குடி, ராமநாதபுரம், குமரி, சிவகங்கை, தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கனமழை பெய்யும் மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.