Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

“ஐஸ்வர்யா ராஜேஷ்” சினிமாவின் நிற அரசியலுக்கு…. திறமையால் முற்றுப்புள்ளி வைத்தவர்….!!

இந்தியாவில் எந்த மொழி திரைத்துறையாக இருந்தாலும் கலாச்சாரம், கதையம்சம், மொழி கதாநாயகன் உருவம், தோற்றம் போன்றவை வேறுபட்டாலும் நாயகி மட்டும் தாஜ்மஹால் பளிங்கு கற்கள் போல, மாசு குறைபாடு இல்லாமல் வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இன்று, நேற்று இல்லாமல் காலம்காலமாக இது ஒரு சாபமாக இருப்பதை நாம் காண முடிகிறது. இந்த நிற அரசியல் காரணத்தால் தங்கள் தாய் மொழி படங்களில் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல், வளர முடியாமல், காணாமல் போனவர்கள் பலர் இருக்கிறார்கள்.

எதுவாக இருந்தாலும், அதற்கு ஒரு தோற்றமும், முடிவும் இருக்கத்தான் வேண்டும். இந்த திரையுலக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். முப்பது வயதைக் கடந்தாலும், குழந்தைகளுக்கு தாயாக நடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் இளம் வயதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து, நிறத்தை மிஞ்சிய தனது திறமையால் ரசிகர்களின் பாராட்டுக்கள் மற்றும் விமர்சனங்களை பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும் பலரது கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் லட்சியங்கள் கொண்டு வளர்ந்து வரும் இளம் பெண்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய சில தகவல்கள் இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இவர் தந்தையின் பெயர் ராஜேஷ். ஐஸ்வர்யா உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். தனக்கு பெண் குழந்தை வேண்டுமென்று ஐஸ்வர்யாவின் தந்தை வரம் இருந்து பெற்ற பெண் தான் இவர்.

தவமிருந்து பெற்ற பெண் என்பதால் ஐஸ்வர்யா மீது தந்தை ராஜேஷுக்கு அளவுக்கு அதிகமாக பாசம் இருந்தது. நடனம் கற்றுக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் அவர் வெற்றி பெற்றார். ஐஸ்வர்யா ராஜேஷிற்கு அதில் ஆர்வம் இல்லை என்றாலும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் முதலில் சின்னத்திரையில் நடிப்பதற்கு வாய்ப்புகளை தேடி உள்ளார்.

ஆனால் அங்கு வெறும் 500 ரூபாய் தான் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணிய ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்ததாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேட தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் நிறத்தை காரணம் காட்டி துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கூட வாய்ப்பு கொடுக்காமல் நிராகரித்து வந்துள்ளனர். சிறுவயதிலிருந்தே உன்னால் முடியாது என்றால், அதனை உடனே முடித்துக் காட்ட வேண்டும்  என்ற எண்ணம் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த நிராகரிப்புகளை எல்லாம் தகர்த்து நடிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று தொடர்ந்து வாய்ப்புகளை தேடினார்.

ஆரம்பத்தில் ஐஸ்வர்யா என்ற பெயரை பயன்படுத்தி வந்த இவர், காக்கா முட்டை படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் என சேர்க்கத்தொடங்கினார். மட்டுமல்லாது, திரைத்துறையிலும் காக்கா முட்டை திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷிற்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்திற்கு முன்பு வரை சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அதன் பிறகு ரசிகர்கள் மனதில் இடம் பெறும் வகையில் கதாபாத்திரங்களை தேர்வு செய்ய தொடங்கினார். மனதில் பல கனவுகளைக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், என்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். அதோடு, இவர் தனக்கே தெரியாமல் பல கனவுகளுடன் வளர்ந்து வரும் இளம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.

Categories

Tech |