தேஜஸ் ரயில் வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும் மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து சென்னைக்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதிநவீன தேஜஸ் சொகுசு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் கொடைரோடு மற்றும் திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று சென்றது. இந்த 2 ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரத்தில் கடைகள் இல்லை. ரயிலுக்கு உள்ளேயும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்படாது என்பதால் பயணிகள் இந்த ரயிலில் செல்வதை தவிர்த்தனர்.
இதனையடுத்து, பயணிகள் வரத்து குறைவாக இருப்பதாக கூறி தேஜஸ் ரயில் கடந்த 4ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் எம்.பி.க்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம், தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் எழுதியுள்ள்ளது. அதில், மதுரை-சென்னை சொகுசு தேஜஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து வரும் 10ம் தேதி முதல் மதுரையில் இருந்து சென்னைக்கு தேஜஸ் ரயில் இருமார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த ரயில்கள் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ரயில்வேயின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.