பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.
மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வென்றதையடுத்து நேற்று முன்தினம் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 24 கேபினட் மந்திரிகள் மற்றும் 33 ராஜாங்க மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். பிரதமர் உள்பட 54 அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இதற்கு முன் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு தற்போது பாதுகாப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங் இன்று பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்தநிலையில், ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்துக்கு சென்று அங்கு உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, அவருடன் சேர்ந்து ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, கப்பல் படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.