உள்ளாட்சியில் 30 சதவீதம் வென்ற பாஜக மக்களவையில் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியுமென்று காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கேள்வியெழுப்பியுள்ளார்
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான 353 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பல்வேறு மாநிலங்களில் பாஜக முழுமையான வெற்றியை பெற்றது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றியது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்ற சூழலில் பாஜகவின் இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்று விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 1221 வார்டுகளுக்கு கடந்த 29_ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மக்களவையில் முழுமையாக வெற்றிபெற்ற பாஜக இதில் 30 சதவீத இடங்களில் தான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 509 வார்டுகளையும், பாஜக 366 வார்டுகளையும், மதசார்பற்ற ஜனதா தளம் 174 வார்டுகளையும் கைப்பற்றியது.
இந்நிலையில் , காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சி வெற்றி குறித்து தெரிவித்த கட்சியின் தலைவர் தினேஷ் குண்டுராவ் , நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 42 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அப்படியானால் மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி கர்நாடகாவில் எப்படி வென்றிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.