கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பழங்குடியின தொழிலாளியான தன்னார்வலர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து மக்கள் காப்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஃபைசர் போன்ற தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவிலும் சீரம் நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் தயாரித்த கோவிஷீல்ட், ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாட்டுக்காக கடந்த வாரம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்திருந்தது.
இதனையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த தடுப்பூசிகளுக்கான ஒத்திகைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் போபாலில், மூன்றாம் கட்ட சோதனையாக பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்ட நபர் ஒருவர் கடந்த டிசம்பர் 21ம் தேதி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியின தொழிலாளரான 42 வயதுடைய தீபக் மராவி என்பவர் கடந்த டிசம்பர் 12ம் தேதி போபாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். திடீரென அடுத்த 10 நாட்களில் அவர் உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து அவரது மரணம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.
The after-effects of vaccination are visible in a person within 30 mins. No side-effects were seen even between 24 & 48 hrs of vaccination,the post-mortem report suggested poisoning: MP Health Minister Prabhu Ram Chaudhary on man who died days after participating in vaccine trial pic.twitter.com/5tUiggO5vx
— ANI (@ANI) January 9, 2021
இது தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட நாள் முதல் 7 நாட்கள் வரை தன்னார்வலர் தீபக் மராவி நல்ல உடல்நலத்துடனேயே இருந்தார். அவரது உடல்நிலையில் எவ்வித விளைவுகளும் ஏற்படவில்லை. ஆனால் 9வது அவர் உயிரிழந்ததற்கும் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும், தீபக் மராவியின் உடலை பிரதே பரிசோதனை செய்த மருத்துவர் அசோக் சர்மா கூறுகையில் தீபக்கின் உடலில் விஷம் கலந்திருக்கக் கூடும் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார்.
இப்படி இருக்கையில், உயிரிழந்த தீபக் மராவியின் குடும்பத்தினர் பேசுகையில், தடுப்பூசி போட்டுக் கொண்டபின் அவர் இயல்பாக இருக்கவில்லை. உடலில் தொடர்ந்து தொந்தரவு இருந்து வந்தது. தோள்பட்டை, வாய் என மாறி மாறி பிரச்னை இருப்பதாக கூறினார். இதனையடுத்து உடல்நிலை மோசமானதாலேயே டிசம்பர் 21ம் தேதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் வழியிலேயெ அவரது உயிர் பிரிந்துவிட்டது என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.