வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளதால் அனைவரும் வேறொரு செயலுக்கு மாறி வருகின்றனர்..
வாட்ஸப் நிறுவனம் இத்தனை நாளாக இலவசமாக மெசேஜ் அனுப்பும் வசதி தந்துகொண்டிருந்தது. தற்போது கட்டணத்திற்கு பதிலாக நமது தகவல்களை கேட்கிறது. அதனை சேகரித்து விளம்பர நிறுவனங்களுக்கு விற்று பணம் பார்க்கப் போகிறது. புதிய பிரைவசி கொள்கை மூலம் நாம் பெர்சனலாக ஒருவருக்கு அனுப்பும் செய்தி, புகைப்படம், லோகேஷன் அனைத்தும் என்கிரிப்ஷன் முறையில் வாட்ஸப் சர்வரில் சேகரிக்கப்படும். நாம் மொபைலில் அவற்றை அழித்தாலும் 30 நாட்கள் வாட்ஸப் சர்வரில் இருக்கும்.
உதாரணத்திற்கு ஒருவரிடம் நீங்கள் வாட்ஸப்பில் தாய்லாந்து சுற்றுலா செல்வது பற்றி பேசுகிறீர்கள் என்றால் அதனை கொண்டு, பேஸ்புக், இன்ஸ்டாவில் நீங்கள் உலவும் போது, உங்களுக்கு தாய்லாந்து விமான கட்டணம், தங்குமிடம் போன்ற விளம்பரங்களை காட்டும். ஒரு புடவை நன்றாக இருக்கிறது என்று பேசினால், அடுத்த முறை பேஸ்புக்கிற்குள் நுழைந்தால் புடவை விளம்பரமாக தென்படும். வீட்டுக்கு எந்த டைல்ஸ் வாங்கலாம் என்று வாட்ஸப்பில் விவாதித்தால், டைல்ஸ் விளம்பரமாக பேஸ்புக், இன்ஸ்டாவில் கொட்டும்.
இனி இந்த கொள்கைக்கு இணங்கினால் தான் அவர்கள் தரும் இலவச சேவையை பயன்படுத்த முடியும். இதனால் தான் சிக்னல் எனும் மெசேஜிங் செயலி டிரெண்ட் ஆகி வருகின்றது. பலரும் டிவிட்டரில் இந்த செயலியை பரிந்துரைக்கின்றனர். பிரைவசிக்கு பாதிப்பு ஏற்படுத்தாத செயலி இது என்று கூறுகின்றனர். ஆப்பிள் ஸ்டோரில் இருக்கும் இச்செயலியில் மொபைல் எண் மற்றும் நமது தொடர்புகள் ஆகிய விவரங்கள் மட்டுமே கேட்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஆண்ட்ராய்டிலும் இச்செயலி உள்ளது. கேமரா, மைக், அலைபேசியில் பதிந்துள்ள தொடர்புகள், அலைபேசி எண், லொகேஷன் ஆகியவற்றை அணுக மட்டும் அனுமதி கேட்கிறது.
சிக்னல் செயலி, சிக்னல் பவுன்டேஷன் மற்றும் சிக்னல் மெசெஞ்சர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. வாட்ஸப்பின் துணை நிறுவனர் பிரையன் ஆக்டன் வாட்ஸப் செயலியை பேஸ்புக் நிறுவனத்திற்கு விற்ற பின்பு இந்த அறக்கட்டளை ஆரம்பித்தார். 2017-ல் 5 கோடி டாலர் நிதியை அறக்கட்டளைக்கு அளித்தார். இந்த செயலி முற்றிலும் இலவசமானது. லாப நோக்கமின்றி நடத்தப்படுவதாக கூறுகின்றனர். மிக குறைவான தகவல்களை மட்டுமே இது சேகரிப்பதாக கூறுகின்றனர். வாட்ஸப்பின் அனைத்து வசதிகளும் இதில் உள்ளன.