நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை காண்பதற்காக முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டிற்கு ரசிகர்கள் ஒன்று கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார்.
அதன்பிறகு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அப்படத்திற்கு முன்பதிவு செய்ய விஜய் ரசிகர்கள் சென்னை ரோகிணி தியேட்டர் முன்பு கூட்டமாக அடித்துப்பிடித்து நின்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவி வரும் ஆபத்தான சூழலில் முதல்நாள் முதல்காட்சி டிக்கெட்டிற்கு முக கவசம் கூட அணியாமல் ரசிகர்கள் நின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.