அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூபாய் 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் திண்டுக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கம்பளியம்பட்டி பகுதியில் வடமலை என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் அவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூபாய் 13 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். இதனையடுத்து அவரது வீட்டின் எதிரே வட மலையின் உறவினரான தங்கமயில் என்பவர் வசித்து வருகிறார். அவரின் வீட்டின் பூட்டையும் உடைத்த மர்மநபர்கள் 2 பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரத்தை கொள்ளை அடித்துவிட்டு, மீண்டும் வட மலையின் மற்றொரு உறவினரான கரியக்காள் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.ஆனால் அங்கு நகை பணம் எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து காலை எழுந்து பார்த்த வடமலை தனது வீடு மற்றும் தன்னுடைய உறவினர்கள் வீட்டில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து உடனடியாக வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதன் பின் திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையடித்த வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
ஆனால் மோப்ப நாய் அந்த வீடுகளிலிருந்து காளியம்மன் கோவில் வரை ஓடி சென்று யாரையும் பிடிக்கவில்லை. இதனைதொடர்ந்து தடவியல் நிபுணர்கள் கொள்ளையடிக்கப்பட்ட வீடுகளில் பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிந்து மூன்று வீடுகளில் கொள்ளையடித்து சென்ற அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.