சேற்றில் புதைந்திருந்த மனித விரலை எடுத்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
இங்கிலாந்தில் பெண் ஒருவர் தன்னுடைய செல்லப்பிராணியுடன் தனது குடியிருப்பு பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு சேறு நிறைந்த பகுதியில் மனிதனின் கால் விரல் தெரிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தன்னுடைய செல்போனில் அந்த புகைப்படத்தை எடுத்த பெண் தன்னுடைய வீட்டிற்கு வேகமாக வந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் யாரையும் கொன்று புதைத்து உள்ளார்களா? என்று சந்தேகம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து பல போலீஸ் அதிகாரிகள் மோப்ப நாய்கள் உதவியுடன் அந்த பெண் கூறிய இடத்திற்கு விரைந்து சென்று மணிக்கணக்கில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரத்தில் அதுவும் சேறு நிறைந்த பகுதி என்பதால் தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சில மணி நேரத்திற்கு பிறகு மனிதனின் கால் பெருவிரல் புதைந்த நிலையில் இருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த சேற்றிலிருந்து மனித கால் விரலை எடுத்துள்ளனர். அப்போது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் சேற்றில் புதைந்திருந்தது மனிதனின் கால் விரல் அல்ல.
அது உருளைக்கிழங்கு.. சேற்றில் உருளைக்கிழங்கு புதைந்துள்ளது. அந்த உருளைக்கிழங்கின் மேல் பகுதியை சுற்றி பூஞ்சை காளான் முளைத்துள்ளது. இதனால் அந்த உருளைக்கிழங்கு தத்ரூபமாக மனிதனின் விரல் போன்று தோற்றமளித்துள்ளது. பல மணி நேர தேடுதல் வேட்டை வீணாகியுள்ளது. இருப்பினும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சேற்றில் மனித விரல் போன்று புதைந்திருந்ததால் அந்த பெண் விழிப்புணர்வுதன்செயல்பட்டது பாராட்டிற்கு என்று இங்கிலாந்து காவல்துறையினர் தெரிவித்தனர். மனித விரலை போல் தோற்றமளித்த அந்த உருளைக்கிழங்கு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.