மொபட் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராமலிங்கம்(70)- மீனாட்சி(65). இத்தம்பதியரின் மகளின் வீடு கரூர் மாவட்டத்திலுள்ள ஆவாரங்காட்டுப்புதூரில் உள்ளது. இந்நிலையில் மகளை பார்ப்பதற்காக ராமலிங்கமும் அவரது மனைவி மீனாட்சியும் மொபட்டில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர் . நொய்யல் அருகே சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆவாரங்காட்டுப்புத்தூர் பிரிவு வந்து கொண்டிருந்த போது வலதுபுறமாக ராமலிங்கம் தனது மொபட்டை திருப்பியுள்ளார்.
அப்போது பின்னால் பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக தம்பதியர் சென்ற மொபட்டின் மீது மோதியது. இதில் மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட ராமலிங்கமும் மீனாட்சியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் .தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநரான சுதர்சன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.