நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது
12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3 வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக திரிமன்னேவும், கருணரத்னேவும் களமிறங்கினர். ஜேம்ஸ் ஹென்றி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் முதல் பந்தை திரிமன்னே பவுண்டரிக்கு விரட்டினார்.
ஆனால் அடுத்த 2 பந்தில் 4 ரன்களுடன் திரிமன்னே ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த குசல் பெரேராவும், கருணாரத்னேவும் சிறிது நேரம் நிலைத்து ஆடினர். அதன் பிறகு பெரேரா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
திசேரா பெரேரா அவர் பங்குக்கு 27 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 29.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கருணரத்னே மட்டும் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹென்றி மற்றும் பெர்குசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்திலும், கோலின் மன்ரோவும் களமிறங்கினர். தொடக்க முதலே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அற்புதமாக ஆடி அரைசதம் கடந்தனர். இருவரின் பாட்னர்ஷிப்பினால் அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது.
இவர்களை இலங்கை அணியினரின் பந்து வீச்சாளர்களால் ஆட்டமிழக்க செய்ய முடியவில்லை. இருவரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 16.1 ஓவரில் 137 ரன்கள் எடுத்து இலக்கை எளிதாக எட்டியது. கப்தில் 51 பந்துகளில் 73 ரன்களும், மன்ரோ 47 பந்துகளில் 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமால் இருந்தனர்.