கள்ளக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் துறையினருக்கு அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் வந்துள்ளது. தகவலின்பேரில் அப்பகுதியில் ஆய்வு செய்த போலீசார் சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்களை பார்த்தனர்.அவர்களிடம் விசாரிக்கச் சென்றபோது அவர்கள் போலீசாரை கீழே தள்ளி விட்டு தப்பி ஓட முயற்சி செய்தனர்.
ஆனால் அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்,உளுந்தூர்பேட்டை காட்டு நெமிலிபகுதியை சேர்ந்த வாசு என்பதும் இவர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட மூன்றாம் நம்பர் லாட்டரி சீட்டுகளை நீண்ட நாட்களாக விற்பனை செய்து வருவதும் தெரிந்தது. அதன்பின் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.