வருகின்ற 14ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் மகரஜோதி விழா நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோவில்கள் போன்ற இடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு தினமும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு ஆண்டுதோறும் ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். இதனையடுத்து யாத்திரை தடைபடக் கூடாது என்ற எண்ணத்தில் சிலர் மாலை அணிந்து, இருமுடி கட்டி, பதினெட்டு படிகள் இருக்கும் ஐயப்பன் கோவில்களில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ராஜா அண்ணாமலைபுரம், சென்னையில் மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு பக்தர்கள் சென்று சுவாமியை தரிசித்துவிட்டு வருகிறார்கள். இதனால் வருகின்ற 14ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் மகரஜோதி விழா நடைபெறுகிறது. அதுவரை பதினெட்டாம் படி வழியாக சென்று தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ஐயப்ப பக்தர்களே நெய் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.