Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரசவத்தில் உயிரிழந்த தாய்… மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

பிரசவத்தில் தாய் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூரில் உள்ள தொடுதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தேவராஜ் – பவித்ரா. பவித்ரா  நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில்  கடந்த 3ஆம் தேதி  அவர் ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.அப்போது பவித்ராவிற்கு ரத்தம் குறைவாக இருந்ததால் மருத்துவர்களின்  பரிந்துரைப்படி அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின் தாயும்,சேயும்  நலமாக இருந்தனர்.

திடீரென்று இரவு 7 மணி அளவில் பவித்ராவின்  உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப்  பார்த்த பவித்ராவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்  மருத்துவர்களின் அலட்சியத்தினாலேயே அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி திடீரென மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து மருத்துவமனை முதன்மை அலுவலர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு பவித்ராவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் கடந்த மாதம் 30ஆம் தேதி ஒசபுரத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி  என்பவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது பாக்கியலட்சுமிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் குழந்தையின் தலையை துண்டித்து வெளியே எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின்  உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபோன்று தொடர்ச்சியாக ஓசூர் மருத்துவமனை கடந்த சில நாட்களாக சர்ச்சையில் சிக்கி வருகிறது. எனவே காவல் துறையினர் தவறான  சிகிச்சை அளித்த மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |