மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மீது பஸ் சக்கரம் ஏறியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வாட்டார் என்ற கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற ஒரு மகன் உள்ளார். சந்தோஷ் நெடுவாக்கோட்டையில் உள்ள மரம் இழைக்கும் தொழிலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சந்தோஷ் நெடுவாக்கோட்டையிலிருந்து மன்னார்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலைநாதர் கோவில் சன்னதி தெருவில் வசித்து வரும் சேசுராஜ் என்பவரது மோட்டார் சைக்கிள் சந்தோஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் சந்தோஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று சந்தோஷின் மீது ஏறியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சேசுராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசாருக்கு அளித்த தகவலின்பேரில் மன்னார்குடி போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விபத்துக்கு காரணமான செசுராஜை பிடித்து மன்னார்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.