எருது விடும் விழாவில் சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஹள்ளி கிராமத்தில் வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று எருதுவிடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. இந்த எருதுவிடும் விழாவை காண வேப்பனஹள்ளி,ஓசூர், சூளகிரி போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் உமா சேகர் என்பவரது வீட்டு சுவரில் 15க்கும் மேற்பட்டோர் நின்று விருது விழாவை பார்த்துக்கொண்டிருந்தனர். கீழ்ப் பகுதியிலும் சுமார் 20 பேர் நின்று விழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டின் சுவர் மீது அதிகமான நபர்கள் ஏறி நின்றதால் திடீரென கட்டிடம் அதிக பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது.
இதனால் கட்டிடத்தின் மேற்கூரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 15க்கும் மேற்பட்டோர் அப்படியே கீழே விழுந்தனர். இதில் கட்டிடத்தின் கீழ் நின்று கொண்டிருந்த மேகலாஸ்ரீ என்ற 9 வயது சிறுமியும் முனி பாலா என்ற முதியவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 20 பேரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் வேப்பனஹள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெய சந்திரபானு ரெட்டி மற்றும் எம்எல்ஏ ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் முழுமையான அனுமதி பெறாமல் விழாவை நடத்தியதாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு அவர்கள் 5 பேரும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.