ஜனவரி 25ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக மக்கள் கொண்டாடும் வகையில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, திராட்சை 20 கிராம், முந்திரி 20 கிராம், ஏலக்காய் 5 கிராம், முழு கரும்பு மற்றும் 2,500 ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
ரேஷன் கடைகளில் ஜனவரி 4-ந்தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் தொடங்கும் என்றும், இதற்காக வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி கடந்த சில நாட்களாக டோக்கன்கள் வினியோகிக்கும் பணி நடந்து வந்தது.
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை கடந்த மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். ஜனவரி 13ஆம் தேதி வரை கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற அவகாசம் நீட்டித்து அறிவித்துள்ளது. அதன்படி “ஜனவரி 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.