வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பறவைகள் வந்து குவிந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆயிரக்கணக்கான பறவைகள் வடகிழக்கு பருவ மழைக்குப்பின் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும். அந்த பறவைகள் ஆறு மாதம் இங்கு தங்கியிருந்து பின் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு சென்று விடும். மேலும் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் வேடந்தாங்கல் ஏரியில் அதிகளவு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் பறவைகள் முன்னதாகவே வரத் தொடங்கி விட்டன. இந்நிலையில் ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான்,பங்களாதேஷ், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் அரிய வகை பறவைகளான சாம்பல் நாரை, மிளிர் உடல் அரிவாள் மூக்கன் நீர்காகம், வெள்ளை நாரை, நத்தை குத்தி, கூழைக்கடா போன்ற இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்து குவிந்துள்ளன.
ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் வேடன்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது. ஆனால் தற்போது சரணாலயத்தை திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்து மாதங்களுக்குப் பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமானது திறக்கப்பட்டது. அதோடு கொரோனாதடுப்பு கட்டுப்பாடுகளும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.