இந்தி கட்டாயமல்ல என்ற திருத்தப்பட்ட புதிய வரைவு கொள்கைக்கு “அழகிய தீர்வு” என்று ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதியவரைவு கல்வி கொள்கையின் படி மும்மொழி கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை பயிற்று விக்க வேண்டும். அதேபோல இந்தி மொழி பேசும் பிற மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர ஏதேனும் மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை காட்டினர். சமூக வலைத்தளங்களில் இந்தி எதிர்ப்பு ஹேஸ்டேக்குகள் பறந்தன. இதுபற்றி மத்திய அமைச்சர்கள் ஹிந்தி யார் மீதும் திணிக்கப்படாது என தெரிவித்தனர்.
இந்நிலையில் மத்திய அரசு திருத்தப்பட்ட புதிய வரைவு கொள்கையை இணையதளத்தில் வெளியிட்டது. இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கபட்டது. தமிழகத்தில் 3வது மொழியாக இந்தி பாடம் பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாணவர்கள் விருப்பத்தின் படி 3-வது மொழியை அவர்களே தேர்வு செய்து படிக்கலாம் என்று திருத்தப்பட்ட வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த புதிய வரைவு கொள்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இசை புயல் என்று அழைக்கப்படும் ஏ ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில், அழகிய தீர்வு தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல… திருத்தப்பட்டது வரைவு!” என்று பதிவிட்டுள்ளார்.
அழகிய தீர்வு 🌹🇮🇳 ”தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல… திருத்தப்பட்டது வரைவு!”
— A.R.Rahman (@arrahman) June 3, 2019