Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளை மறுநாள் பொங்கல்…. தயாராகும் பானைகள்…. தொழிலாளியின் வேதனை…!!

பொங்கல் திருநாளிற்காக பழனி ஆயக்குடி பகுதியில் மண் பானை தயாரிக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

பொங்கல் திருநாள் வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கலிட தேவையான பொருட்களை தயாரிப்பதில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புறங்களில் எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கலிட்டு கொண்டாடினாலும் கிராமப்புறங்களில் இன்றும் மண் பானைகளில் பொங்கல் இடுவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். மேலும் பொங்கல் திருநாளுக்கு தங்களது மகள் வீட்டிற்கு சீர்வரிசையாக மண்பானையை வழங்குகின்றனர்.

இதனால் பொங்கல் பண்டிகைக்காக அனைவரும் புதிதாக மண்பானைகளை வாங்குவார்கள். இதனையடுத்து பழனியில் ஆயக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மண் பானை தயாரிப்பு மிக அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்காக ஆயக்குடியில் மண்பானை தயாரிக்கும் வேலைகள் மிக மும்முரமாக நடக்கிறது. சிறிய அளவு முதல் பெரிய அளவிலான மண்பானைகள் வரை தயார் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பானையின் அளவைப் பொறுத்து அதன் விலை வேறுபடுகிறது. ரூபாய் 40 முதல் 80 வரையில் பானைகள் விற்கப்படுகின்றன.

புது ஆயக்குடியை சேர்ந்த ஆறுமுகம் என்னும் தொழிலாளியிடம் கேட்டபோது அவர் கூறியது,’ “தற்போதுள்ள சூழலில் மண் பானைகள் தயாரிக்க தேவையான மண் போதிய அளவு கிடைப்பதில்லை. அதனோடு பானைகள் தயாரிப்பதற்கான செலவை கணக்கிடும் போது விற்கப்படும் விலை தங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை. இதனால் பானை தயாரிப்பவர்களுக்கு நஷ்டமே மிஞ்சுகிறது. அதனால் தொழிலாளர்கள் தயாரிக்கும் மண்பானைகளை அரசே வாங்கி விநியோகம் செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

Categories

Tech |