Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விடிய விடிய கடும் குளிரில்… போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்… ஈரோட்டில் பரபரப்பு….!!

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 82 மாற்றுத்திறனாளிகளுக்கு  கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் இலவச வீட்டு மனை நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒதுக்கப்பட்ட இடம் கரடு முரடாக இருப்பதாக சமன் செய்து தரக்கோரி கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் உயர் அதிகாரிகள் நடத்திய   பேச்சுவார்த்தையில் சமன் செய்து தருவதாக உறுதியளித்தனர். ஆனால் ஒரு நாள் மட்டுமே இயந்திர  உதவியுடன்  சமன் செய்யும் பணிகள் நடைபெற்று உள்ளது. பின்னர் பணிகள் நடக்கவே இல்லை.

இந்நிலையில் நிலத்தை சமன்  செய்து தரக்கோரி மீண்டும் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு தாலுகா அலுவலகத்தில்  நேற்று மதியம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  தாசில்தார் பரிமளாதேவி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்பட்ட 2.1 ஏக்கர் நிலம் முழுவதும் பாறைகளாகவும் கரடு முரடாகவும் உள்ளது. இதனை சமன் செய்ய வேண்டுமென்றால்  15 லட்சம் வரை செலவாகும். இருப்பினும் நாங்கள் சமன் செய்து தருகிறோம் எங்களுக்கு  சிறிது கால அவகாசம் கொடுங்கள் என்று கூறினார்.

ஆனால் நீங்கள் பணிகளை தொடங்கி முடிக்கும் வரை நாங்கள் இங்கேயே இருக்க போகிறோம் என்று மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துவிட்டனர்.  இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் இரவு முழுவதும் கடும் குளிரில் கொசுக்கடியில் விடிய விடிய காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பெண்களும்  குழந்தைகளும் இரவு வீட்டிற்கு சென்று விட்டனர். ஆனால் ஆண்கள் அங்கேயே போர்வையை விரித்து தூங்கி விட்டனர். இந்நிலையில் இன்று 2வது நாளாக அவர்களது  காத்திருப்பு போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டம் நடத்திய இடத்திலேயே அவர்கள் உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Categories

Tech |