பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு அதிகளவு மக்கள் சொந்த ஊர்களுக்கு ரயில்களில் பயணித்து சென்றனர்.
பொங்கல் பண்டிகையானது வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறையானது 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் இருக்கிறது. இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில்களிலும், டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் இம்முறை முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கு அனுமதி இல்லாததால் அனைத்து பயணிகளும் முன்பதிவு செய்த பின்னரே ரயிலில் பயணம் செய்தனர். இதனால் அனைத்து ரயில்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
இதில் 300 முதல் 500 பேர் வரை ஒவ்வொரு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காததால் பஸ்களில் சொந்த ஊருக்கு சென்றனர். இதனையடுத்து எழும்பூரில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட ரயில்களில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 85 ஆயிரம் பயணிகள் ரயில்களில் பயணித்தனர். எனவே ஒரே நாளில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர். இதேபோல் மேலும் 2 லட்சம் பேர் இன்றும் நாளையும் ரயில்கள் மூலம் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். இதனால் தட்கல் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுண்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.