அதிமுகவினர் பொங்கல் பரிசு தவிர தங்கள் தொகுதிக்கு மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசும் வழங்கி வருகின்றனர்.
தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் இருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழக்கமான சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு முழு கரும்பும், 2,500 ரூபாய் ரொக்கமும் வழங்கி வருவது அனைவரும் அறிந்த செய்தியே. அந்த 2,500 ரூபாய் பணப் பரிசு தேர்தலுக்காக வழங்கப்படுகிறது என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதோடு, இந்தப் பணம் குடும்ப அட்டை தாரர்களுக்கு அதிகாரிகள் மூலம் வழங்கப்படவேண்டும். அதிமுகவினரால் வழங்கப்படக் கூடாது என்று கூறினார்.
மேலும் ரேஷன் கடைகளுக்கு அருகே அதிமுக பேனர்களை அகற்ற வேண்டும் என்று வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் ரேஷன் கடைகளுக்கு அருகே இருக்கும் அதிமுக பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில், அதிமுகவின் தலைமை கழகத்தில் இருந்து அரசு வழங்கும் பரிசைதவிர அமைச்சர்களுக்கும் , சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தங்கள் தொகுதிகளில் இருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, அதிமுக அமைச்சர்கள் முதல் கட்டமாக தங்கள் தொகுதிகளில் பொங்கல் பரிசுகளை கொடுக்க தொடங்கிவிட்டனர். அரிசி, சேமியா, நாட்டு சர்க்கரை, கோதுமை, ரவா, மல்லித்தூள், டீ தூள், காபித் தூள், மிளகாய் தூள், உள்ளிட்ட பொருட்கள் அந்த பரிசுப் பையில் இருக்கின்றன. தேர்தல் பூத் சீட்டு போல டோக்கன் வழங்கப்படுகிறது, டோக்கனின் ஒரு பகுதி பயனாளர்களிடம் வீடுவீடாக அதிமுகவினர் கொடுத்து வருகின்றனர்.