திருப்பூரில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மக்காசோளத்தை வைத்து மக்கள் வழிபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று அமைந்துள்ளது. இந்த உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் நிச்சயமாக சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. இந்நிலையில் கொங்கூர் பகுதியைச் சேர்ந்த சிவராம் என்ற பக்தரின் கனவில் முருகன் தோன்றி உத்தரவு பெட்டியில் இந்த ஆண்டு மக்காச்சோளம் வைத்து பூஜை செய்யுமாறு உத்தரவிட்டதாக அந்த பக்தர் கோவிலுக்கு வந்து நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து சாமியிடம் உத்தரவு பெற்று உத்தரவு பெட்டியில் நிறை நாழியில் மக்காச்சோளம் வைத்து பக்தர்கள் பூஜை செய்தனர். இதனால் மக்காச்சோளம் விளைச்சல் அதிகரிக்கும் மற்றும் விளைச்சலுக்கு ஏற்ற விலையும் கிடைக்கும் என்று விவசாயிகளும் பக்தர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் நிறைநாழியில் அரிசி வைத்து பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.