திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், முருகனின் பக்தி பாடல்களை பாடியும் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலில் பொங்கல் நாளன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:3௦ மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். இதனைத்தொடர்ந்து 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், மற்ற கால பூஜைகளும் திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும்.
கடந்த இரண்டு நாட்களாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. ஆனால் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் ஆட்டோக்கள், மினி வேன்கள் மற்றும் மினி லாரிகளில் அலங்கரிக்கப்பட்ட முருகன் புகைப்படங்களுடன் சப்பரம் அமைத்து ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்களை ஒலிபரப்பியவாறு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கின்றனர்.
இதனையடுத்து திருச்செந்தூர் நகர எல்லையில் சூடம் ஏற்றி வழிபட்ட பின்னர் மழையில் நனைந்தவாறு பாதயாத்திரையாக பக்தர்கள் திருச்செந்தூர் நகருக்குள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்று கொண்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் கடலில் புனித நீராடி விட்டு, கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகரை தரிசித்து விட்டு செல்கின்றனர். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் திருச்செந்தூர் நோக்கி இன்னும் படையெடுத்து சென்று கொண்டிருக்கின்றனர்.